உலகை இணைக்கப்போகும் அக்யூலா!
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மார்க் ஸக்கர்பர்க் என்ற இளைஞரால் 2004-ம் ஆண்டு பொழுதுபோக்காகத் தொடங்கப்பட்ட ஒரு விஷயம், இன்று உலகின் பெருமளவு மக்களால் இணையதளத்தின் உதவியுடன் பயன்படுத்தப்படுகிறது. அதுதான் ஃபேஸ்புக்!
உலக மக்களை ஒன்றாக இணைத்திருக்கும் இந்த ஃபேஸ்புக் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. பயனாளர்களின் வசதிக்காகப் புதிய புதிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், தற்போது ஃபேஸ்புக் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது பற்றித் தனித்துவமான யோசனையை முன்னெடுத்திருக்கிறது. அதுதான் ஃபேஸ்புக் விமானம்.
நகரங்களில் வசிப்பவர்களுக்கு இணையதள வசதி கிடைப்பது எளிது. அதனால், அவர்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இணைய சேவை கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். எனவே, எல்லா இடங்களிலும் ஃபேஸ்புக் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய, சூரிய ஆற்றல் உதவியுடன் உலகை வலம் வரும் ஆளில்லா விமானத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வெள்ளோட்டம் விட்டுள்ளது.
ஃபேஸ்புக் அக்யூலா லேப்
விண்ணில் பறந்தபடியே தடையில்லா இணையதள சேவையை (Wi-fi hot spot) வழங்கும் சக்தி படைத்த இந்த ஆளில்லா விமானத்துக்கு ‘அக்யூலா’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரிலேயே இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டாலும், அந்த விமானம் தரையிறங்குவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது.
அந்தச் சிக்கலுக்கு தீர்வு கண்ட பின்னர், ஜூலை முதல் வாரத்தில் ‘அக்யூலா’ சூரிய ஆற்றல் விமானத்தை அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் ஃபேஸ்புக் நிறுவனம் சோதனை செய்து பார்த்திருக்கிறது. போயிங் விமானத்தைவிட மிகப் பெரிய இறக்கைகளைக் கொண்ட இந்த ஆளில்லா விமானம், 3 ஆயிரம் அடி உயரத்துக்குச் சென்றதுடன், ஒன்றே முக்கால் மணி நேரம் வானிலேயே உலா வந்தது.
கடந்த டிசம்பரில் நடந்த சோதனை ஓட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்கள் இந்த 2-வது சோதனை ஓட்டத்தில் இல்லை என்பது அதை வடிவமைத்த குழுவினருக்கு மட்டுமின்றி ஃபேஸ்புக் நிறுவனத்தினருக்கும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
மார்க் ஜக்கர்பர்க் கனவின் படி, இந்த அக்யூலா விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தால், உலகெங்கும் உள்ள மக்களுக்குத் தடையில்லா இணையதள சேவை கிடைப்பது உறுதி
0 Comments